செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மகிழியாய்க் கல்வியிலை!

ஆறாம் ஆண்டு
ஏன் வந்ததோ?
ஆறாத் துன்பத்தை
ஏன் தந்ததோ?

மதிப்பெண்ணோ புள்ளியில்
மதிப்பில்லை பள்ளியில்
விதிபோட்டார் யாரோ
விடையுரைப் பாரோ?

மதிப்பிடல் நன்றாம்
மதிக்கிறேன் நன்றாய்
மதிப்பிடும் பேரிலே
மிதிக்கிறார் ஊரிலே!

விளையாட வழியில்லை
வீட்டிலும் இதேதொல்லை!
முளைவிடும் பயிர்நான்
முனையிலே கிள்ளிட்டார்!

கலையிலே காமுற்றேன்
காலையிலே படியென்றார்!
மலையேற ஆவலுற்றேன்
மாலையிலும் படியென்றார்!

வாட்டுவார் பலருண்டு
ஓட்டுவார் தேர்வென்று!
ஊட்டுவார் யாருமில்லை - எடுத்துக்
காட்டுவாரும் இங்கில்லை!

பணிக்கின்ற கல்வியாளர்
பண்பை விதைக்கவில்லை!
திணிக்கின்ற கல்விச்சாலை
திறமையை வளர்க்கவில்லை!

மகிழ்ந்து காலம்போக்க
மகிழியாய் ஒன்றுமிலை
மகிழ்ந்து நான்படிக்க
மகிழியாய்க் கல்வியிலை!

மாறட்டும் தமிழிதழ் தமிழாய்!

மாறட்டும் தமிழிதழ் தமிழாய்!

காலங்காலமாச் சொல்லிக்கொண்டுதான் வாரேனுங்க
காதுலயாரும் போட்டுக்கிட்டதா தெரியலங்க!
கடப்பாடுன்னு நினைச்சே சொல்லுறேனுங்க
கடமையுணர்வு உள்ளவங்க கேட்டுகோங்க!

நாளிதழ் நடத்தும் நல்லவங்களே
நன்மை ஒன்று செய்யுங்களேன்!
தமிழ்ப்பள்ளி மாணவர் அடைவைமட்டும்
தமிழ்நாளிதழ் தாங்கி மலரட்டுமே!!

தமிழ்மீதோ தமிழ்ப்பள்ளிமீதோ பற்றிலார்
தேர்வுமுடிவைத் தமிழ்நாளிதழ் ஏற்கலாமோ?
அமிலமெனத் தமிழமுதம் பருகார்
அடைவைத் தங்கநாளிதழ் தாங்கலாமோ?


தமிழோடு உறவு வேண்டாதார்
தமிழிதழில் உறவுதேடல் தீது!
தமிழ்ப்பள்ளியே தேர்வென்று உரைத்துத்
தமிழுக்கு விளைக்காதீர் ஊறு!


மலாய் ஏட்டிலோ சீனவேட்டிலோ
மலரட்டும் அவர்படம் அழகாய்!
மானம் தடுத்தாலோ மனமுறுத்தினாலோ
மாறட்டும் தமிழிதழ் தமிழாய்!

ஆண்ட இனமே விழித்திடுக!


ஆண்ட இனமே விழித்திடுக!
இன்று தீபத்திருநாள் என்றே
இனிய வாழ்த்துக் கூறுகின்றீர்
அன்றும் தீபத்திருநாள் என்றே
அன்பு வாழ்த்துக் கூறிச்சென்றீர்!

ஓராண்டில் இருமுறை தீபத்திருநாள் 
ஒளிர்வது உண்மையாமோ சொல்லுங்கள்?
பாராண்ட இனமிது மெய்யானால் 
பண்பாடு அறியாமல் போனதேனோ?

திருநாள் என்பதே தமிழர்தம்
பெருநாள் என்றே உணருங்கள்!
ஆரியப் பண்டிகை நமதன்று
                                                      அரிந்திடுக மடைமையை இன்றே!

ஒளிவிழா பெருவிழா திருவிழா
ஒளிர்ந் ததுவே கார்த்திகை!
ஆவளிவிழா ஆரியவிழா வடவிழா
ஆண்ட இனமே விழித்திடுக!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வடை போச்சே!
கடையிலே பாட்டிசுட்ட வடைய
காகம் திருடிப்போன கதைய
இடையிலே வந்தவன் திருட
இழியினம் இல்லநாம் பொறுக்க!

திட்டமிட்டே நடக்குது இவ்வேலை
திருடவந்த கூட்டத்தின் பெருமூளை!
சட்டம்கூட துணைசெய்யும் இந்நாளை
சதியிலிருந்து தப்பிப்பதே நம்வேலை!

உணவை மட்டுமா இழந்தோம்?
உணர்வையும் சேர்த்தே துறந்தோம்!
கனவைக் காற்றில் இழைத்தோம்
கடமை ஆற்ற மறந்தோம்!

பெருமைப் படுத்தவில்லை பண்பாட்டை
போற்றிக் காப்பதுமில்லை வரலாற்றை!
கருவை அறுத்தும் கவலையில்லை
கோபம் வருவதில் நியாயமில்லை!

மண்ணுமில்லை மண்டையில் ஒன்னுமில்லை
மதிப்பிழந்து வாழ்வதிலே என்னகண்ட?
ஒன்றல்ல ரெண்டல்ல எடுத்துச்சொல்ல
ஒரேடியா இறந்துவிட்டா நல்லதில்ல?